Saturday, June 12, 2021

கொரொனா காலத்தில் மனநல மருந்துகள்

 பலரும் சமீபமாக என்னைத் தொடர்புகொண்டு கேட்பது மூன்று விஷயங்கள்தான்

எனக்கு கொரொனா வந்துவிட்டது உங்கள் மருந்துகளை தொடரலாமா?
கொரொனா இருக்கும்போது உங்கள் மருந்துகளால் பாதிப்பு வராதா?
மனநல மருந்துகள் எடுக்கும் போது கொரொனா தடுப்பூசி போடலாமா?
இதில் முதல் கேள்வி இருக்கும்போது கொரொனா மருந்துகள் தொடரலாமா என்பது இதற்கு நேரடியான பதில் கிடையாது காரணம். மனநல மருந்துகள் கொரொனாவுக்காக கொடுக்கப்படும் சிகிச்சையிலும், கொரொனாவின் அறிகுறிகளையும் எப்படி பாதிக்கும் என்பது மருந்தைப் பொருத்து வேறுபடும் நீங்கள் எடுக்கும் மருந்துகள் எது என்று தெரியவரும்போதுதான் அதற்கு ஏற்ற மாதிரி பரிந்துரை செய்ய முடியும் ஆகவே உங்களுக்கு கொரொனா பாதிப்பு என்று உறுதி செய்யப்பட்டால் உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்
அவ்வாறு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை சாப்பிட்டால் எந்த பாதிப்பும் வராதா? இதற்கு முன்னால் நடந்த ஆய்வுகளின் முடிவுகளை வைத்தே இந்த கேள்விக்கு பதில் கூறமுடியும். மனநல மருந்துகள் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. வைத்தியம் செய்யப்படாத மனநோய்கள் இருந்தால் அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் தீவிரமாக இருப்பதாகவே இதற்கு முன் நடந்த பல ஆய்வுகள் கூறுகின்றன ஆகவே மனநல மருந்துகள் உங்கள் வியாதியை எதிர்கொள்வதற்கு மிகவும் முக்கியம். அவற்றை நிறுத்த வேண்டாம்.


மனநல மருந்துகள் எடுக்கும் போது தடுப்பூசி போடலாமா என்றால் அதற்கு என் பதில் - கட்டாயம் போடலாம். இன்றைய நிலைமையில் கொரொனாவை எதிர்கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி தடுப்பூசிகள் மட்டும்தான். ஆகவே அனைவரும் அது கோவீஷீல்டாக இருந்தாலும் சரி கோவாக்ஸினாக இருந்தாலும் சரி கட்டாயம் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதற்கும் மனநல மருந்து எடுப்பதற்க்கும் தொடர்பிருப்பதாக இதுவரையில் எந்த ஆய்வும் இல்லை. பொதுவாக கேள்விப்பட்டதிலும் என் தனிப்பட்ட அனுபவத்திலும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு வரும் வியாதி மிக மிக தீவிரம் குறைவாக உள்ளது. தடுப்பூசி போட்டவர்களில் உயிரிழந்தவர்கள் என்பது மிக மிக அபூர்வமாகவே உள்ளது ஆகவே அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்

Wednesday, May 17, 2017

மன நல மருந்துகள் - ஒரு கேள்வி பதில்...

மனநல மருந்துகள் என்றுமே சர்ச்சைக்குரியவை. பலருக்கு மன நல மருந்துகள் என்றால் அவை தூக்கமாத்திரைகள் மட்டுமே. ஆனால் இன்றைய மனநல மருத்துவத்தில் பல்வேறு பாதுகாப்பான, வீரியம் கொண்ட மருந்துகள் உள்ளன. வழக்கமாக என்னிடம் மனநல மருந்துகள் பற்றி கேட்கப்படும் கேள்வி பதில்களை தொகுத்துள்ளேன்.

1. மனநல மருந்துகள் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன?

மனநல பிரச்சினைகள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினாலேயே ஏற்படுகிறது என்று ஏற்கனவே பார்த்தோம்.(பார்க்க ;மனநோய்கள் – ஒரு எளிய அறிமுகம்.... ) இந்த மாற்றங்களை சரி செய்வதே மனநல மருந்துகளின் நோக்கம்.

2. மனநல மருந்துகள் தூக்கமாத்திரைகளா?
இல்லை. மன பிரச்சினைகளை போல மனநல மருந்துகளும் பல்வேறு வகைப்படும். அவற்றின் ஒரு பக்கவிளைவே தூக்கம். எல்லா மருந்துகளும் தூக்கம் தராது. இந்த பக்க விளைவு நாளாக நாளாக குறைந்துவிடும். 

3. மனநல மருந்துகள் போதை பொருளா? பழக்கம் தருபவையா?
மனநல மருந்துகள் பழக்கம் தருபவை அல்ல. அவற்றை எவ்வளவு காலம் எடுத்தாலும் அவை நம்மை அடிமைப்படுத்தாது. அவை எடுப்பதால் மூளையின் மாறுதல்கள் சரி செய்யப்படுமே ஒழிய அவை இல்லாமல் வாழ முடியாது என்பது போன்ற நிலையை ஏற்படுத்தாது.

4. மனநல மருந்துகள் எடுத்தால் வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டியது வருமா?
மனநல பிரச்சினைகள் நீரிழிவு, ரத்தகொதிப்பு போன்ற நோய்களை போன்றவை. எவ்வாறு இவைகளை கட்டுபடுத்த மாத்திரைகளை எடுக்கிறோமோ அது போல் மனநல பிரச்சினைகள் அதிகரிக்காமல் இருப்பதற்கு மருந்துகள் எடுப்பது அவசியப்படலாம். மனநல பிரச்சினைகள் பல்வேறு வகைப்படும். சிலருக்கு மரபியல் மற்றும் பல காரணத்தால் மீண்டும் மீண்டும் பிரச்சினை ஏற்படும். இது போல் அடிக்கடி ஏற்பட்டால் மூளையில் சில மாறுதல்கள் ஏற்படும். அதனால் அடுத்தடுத்து வரும் போது சீக்கிரம் சரியாகாது. அதிக மாத்திரைகள் தேவைப்படும். நோயின் தீவிரம் அதிகரிக்கும். ஆகையால் அவ்வாறு அடிக்கடி வருவதை தடுக்க சில காலம் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். நோயின் தீவிரம் மற்றும் சில காரணங்களை வைத்து எவ்வளவு காலம் என்பது மருத்துவரால் முடிவு செய்யப்படும். சராசரியாக ஆரம்ப கட்டங்களில் இது 6 மாதங்கள் முதல் இரண்டு வருடம் வரை இருக்கலாம். வெகு சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகள் தேவைப்படலாம்.

5. மனநல மருந்துகள் உடலை பாதிக்குமா? பக்கவிளைவுகள் மிக்கதா?
எல்லா மருந்துகளுக்கும் பக்கவிளைவுகள் உண்டு. ஆனால் அவை எல்லோருக்கும் வர வேண்டிய அவசியமில்லை. மனநல மருந்துகள் பொதுவாக நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தாது.

6. கர்ப்பம் மற்றும் குழந்தைக்கு பால் கொடுத்தல் மனநல மருந்துகள் எடுக்கும் போது பாதுகாப்பானதா?
பல சமயங்களில் மனநல மருந்துகள் கர்ப்பகாலத்தில் பாதுகாப்பாக கொடுக்கலாம். ஆனால் மனநல மருந்துகளில் சில கர்ப்பகாலத்தில் மற்றும் பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டியது இருக்கும். உங்களின் மருத்துவரின் ஆலோசனை படி செயல் படுவது நல்லது.

7. மனநல மருந்துகளை விட்டு விட்டு எடுக்கலாமா?
இவ்வகை மருந்துகள் எடுக்க எடுக்க ரத்தத்தில் அளவு அதிகரித்து ஒரு குறிப்பிட்ட அளவை கடந்ததும் செயல்பட தொடங்கும். அதற்கு மூன்று நாள் முதல் ஒரு வாரம் வரை மாத்திரைகளை பொறுத்து வேறுபடும். இவற்றை விட்டு விட்டு எடுத்தால் அந்த அளவுகள் சரிவர வராது. ஆகவே மருத்துவர் பரிந்துரைத்த காலம் தொடர்ந்து எடுக்கவும்.

8. எனக்கு தினமும் மாத்திரை எடுக்க கடினமாக உள்ளது. வேறு வழி உண்டா?
சில மாத்திரைகளுக்கு மாற்றாக மாதம் ஒரு முறை போடும் ஊசிகள் உண்டு... ஆனால் பல மாத்திரைகள் தினம் உட்கொள்ளும் வகைதான்.

9. மாத்திரையை சட்டென்று நிறுத்தினால் பிரச்சினை வருமா?
மாத்திரையை அவ்வாறு நிறுத்துதல் நல்லதல்ல... மாத்திரையை பொறுத்து , அது எத்தனை காலம், என்ன டோஸில் எடுக்கப்பட்டது என்பதை பொறுத்து தொந்திரவுகள் ஏற்படலாம். ஆகவே நிறுத்துவதென்றால் உங்களின் மருத்துவரை கலந்தாலோசித்து படிப்படியாக நிறுத்துவதே நலம்.

இறுதியாக மனநல மருந்துகளும் மற்ற மருந்துகளை போலத்தான். அவற்றை எடுக்கும் போது வரும் தொந்திரவுகளை பற்றி உங்களின் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். மருந்துகளில் பல்வேறு வகைகள் உள்ளன. உங்களுக்கு ஒத்துவர கூடிய மருந்துகளை தேர்ந்து எடுக்க உங்களுக்கு அவர் உதவுவார்.

Monday, May 26, 2014

மனநலத்துறை - ஒரு அறிமுகம்

மிக நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் இங்கே பதிவிடுகிறேன். இடைவெளி சிந்திக்க என்ன செய்தி சொல்ல என்று முடிவெடுக்க உதவியது. அதன் வெளிப்பாடாக அடுத்தடுத்து வரும் பதிவுகள் மன நலம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை பேசும். 

"நீங்க என்ன ஸ்பெஷலிஸ்ட் சார்?"
"சைக்கியாட்ரிஸ்ட்ங்க"
ஒரு நிமிடம் யோசிப்பார். "ஓ! நம்ம ஒண்ணு விட்ட மாமா பொண்ணு கூட உங்களை மாதிரிதான். சைக்காலஜிஸ்டு..."
"சைக்காலஜிஸ்ட் இல்லைங்க சைக்கியாட்ரிஸ்ட்"
"அதாங்க சொன்னேன். இந்த கவுன்சலிங் பண்ணுவீங்களே அதானே..."

புதிதாக யாரையாவது நான் சந்தித்தால் தவறாமல் நடக்கும் டயலாக் இது. இவர்களுக்கு என்றில்லை. எந்த மருத்துவம் சார்ந்த பத்திரிகையை எடுத்தாலும் மனநல மருத்துவர் ஆலோசகராகும் ஒரு உதாரணமாவது காட்ட முடியும். உண்மையில் இவர்களுக்குள் என்ன வேறுபாடு என்று தெரிந்து கொள்வது சரியான வழிக்காட்டுதலை பெற மிகவும் அவசியமாகும். இவர்களை தவிரவும் மனநலத்துறையில் உள்ள மற்ற சிலரையும் இவர்களின் மாறுப்பட்ட அணுகுமுறைகளையும் பற்றி பேசவே இந்த பதிவு.

1. மனநல மருத்துவர்.
மன நல மருத்துவர்கள் அடிப்படையில் மருத்துவர்கள். அதாவது MBBS படித்தவர்கள்.
அதன் பின் மேற்படிப்பு இரண்டு உண்டு :-
1. DPM  - Diploma in Psychological Medicine அதாவது பட்டய படிப்பு
2. M.D.(Psychiatry) - அதாவது பட்டப்படிப்பு.

வித்தியாசம்-  D.P.M இரண்டு வருடப்படிப்பு. M.D. - மூன்று வருட படிப்பு.

இவர்கள் மருத்துவ பயிற்சி பெற்றவர்கள் என்பதால் மனநல மருந்துகள் பரிந்துரைக்கும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உண்டு.  மனோதத்துவ சிகிச்சை முறைகளிலும் இவர்களுக்கு இந்த 2/3 வருடங்களில் பயிற்சி அளிக்கப்படும். சுருக்கமாக சொன்னால் ஆல்-ரவுண்டர்கள்.

2. மனநல ஆலோசகர்.
இங்கேதான் குழப்பம் ஆரம்பிக்கின்றது. மனோதத்துவம்(Psychology) ஒரு படிப்பு. அது தனியாக பட்டப்படிப்பாகவும் உள்ளது. சில படிப்புகளில் ஒரு பேப்பர் மட்டுமே இருக்கும் வகையிலும் உள்ளது. பட்டப்படிப்பு என்று எடுத்துக் கொண்டால் Bsc (Psychology) அதன் பின் Msc (Psychology) என்று உண்டு. இதை காலேஜ் பொய் முழு நேரப்படிப்பாக படிப்பவர்கள் உண்டு. கரஸ்ப்பாண்டன்ஸ் கோர்ஸாக படிப்பவர்களும் உண்டு. இந்த இரண்டு வகையிலுமே இவர்களுக்கு படிப்பு புத்தகம் மட்டும்தான். இந்த படிப்பின் நோக்கம் வைத்தியம் அளிப்பதில்லை. பலர் இதை முடித்தப்பின் கவுன்சிலர் என்று போட்டு நோயாளிகளை பார்க்கிறார்கள். இது தவறு. ஏட்டு சுரைக்காய்கள் என்றுமே கறிக்கு உதவாது. அப்படியென்றால் யார் உண்மையான மன நல ஆலோசகர்? இந்த படிப்புகளுக்குப் பின் MPhil(Clinical Psychology) என்று ஒரு படிப்பு உள்ளது. அதன் இரண்டு வருடத்தில் ஆறு மாதங்கள்(கல்லூரியை பொறுத்து மாறுபடும்) மனநலப் பிரிவில் நோயாளிகளை பார்ப்பார்கள். இவர்கள் மனோதத்துவ சிகிச்சை முறைகளில் ஓரளவு தேர்ச்சி பெற்றவர்கள். (ஏன் ஓரளவு? மனோதத்துவ சிகிச்சைகளை பற்றி பேசும் போது சொல்கிறேன்.) இதோடு விட்டால் பரவாயில்லை. இதிலும் ஒரு இக்கன்னா உண்டு. இதையும் கரஸ்ப்பாண்டன்ஸில் படிக்கலாம். நோயாளிகளை பார்க்காமல் எப்படி வைத்தியம் பார்க்க முடியும் என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

இது தவிர கவுன்சலிங்க்கு என்றே சில படிப்புகள் உள்ளன. அதை முடித்தவர்கள் மனோதத்துவ நிபுணர்கள் கிடையாது. அவர்கள் கவுன்சலர்கள் மட்டுமே. கவுன்சலிங் மனோதத்துவ சிகிச்சைஆகாது.(பார்க்க: கவுன்சலிங் உண்மையில் என்ன?)

3. மனநல சமூகப்பணியாளர்கள்: (Psychiatric Social Workers)
இவர்கள் சமூகப்பணியாளர்களுக்கான அடிப்படை படிப்பையும், அதன் பின் மேல் படிப்பாக மனநல சமூகப்பணி படிப்பையும் முடித்தவர்கள். இவர்களும் கவுன்சலிங் போன்ற விஷயங்களில் ஈடுப்படலாம். அது தவிர பொது மக்களிடம் மனநல விழிப்புணர்வை ஏற்படுத்துதல், Group Therapy போன்ற குழு சிகிச்சை முறைகள் போன்றவற்றை செய்யலாம்.


இது தவிர மனநல செவிலியர்கள் போன்றோரும் மனநலத்துறையில் உள்ளனர். இவர்கள் எல்லாம் ஒரு குழுவாக செயல்படும்போது தான் மனநல மருத்துவம் முழுமையடையும். 
(Photo Courtesy: http://www.acadiahealthcare.com/wp-content/uploads/2011/09/meadowwood.jpg)

Friday, July 5, 2013

உதவாத கரங்கள்...விந்தை மனிதர்கள்... வித்தியாசமான வியாதிகள் ...2

உதவாத கரங்கள்...

நேற்று ஒரு வணிக வளாகத்தில் ஒரு தற்கொலை. ஒரு இளைஞர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதை மெயின் செய்தியின் ஓரத்தில் இன்றைய பத்திரிகைகளில் வந்த ஒரு பெட்டி செய்தியினை பற்றியதுதான் இந்தப்பதிவு.

அந்த இளைஞர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது வெளியே வேறு ஒரு போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. விழுந்த அந்த இளைஞரை  போலீஸ் உட்பட யாரும் நெருங்கவில்லை - கிட்டத்தட்ட பதினைந்து நிமிடத்திற்கு... அதன் பின் யாரோ சிலர் முயன்று ஆட்டோ வைத்து அவரை கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். அங்கிருந்தவர்கள் அதை கண்டித்து வழக்கம் போல் போராடியிருக்கிறார்கள்.

இது முதல் முறையில்லை. சில காலம் முன் அமைச்சர்கள் முன் குண்டு வெடித்து இறந்த எஸ்.ஐ., டெல்லி கற்பழிப்பில் இறந்த பெண் என்று இடம், காலம் மட்டும் வேறுப்பட்டு இது வரை பல நிகழ்வுகள். இந்த சம்பவங்கள் எல்லாமே ஒரு ஒற்றுமை கொண்டுள்ளன. நம் முன் ஒரு சக உயிர் துடிக்கும்போது பாய்ந்து முன் செல்ல நம்மை தடுப்பது எது? இந்த கேள்விக்கு பலரும் பல பதில் சொல்லக்கூடும். உளவியல் என்ன சொல்கிறது??? அதற்கு நீங்கள் கிட்டி ஜெனோவேஸ்கியை (Kitty Genovese) தெரிந்துக்கொள்ள வேண்டும்.


கிட்டி ஒரு நடுத்தர வர்க்க சராசரி அமெரிக்கப்பெண். 1964 நியூயார்க் நகரத்தில் ஒரு பாரில் வேலை செய்தபடி தன் வாழ்கையை கழித்து வந்தார். ஒரு குளிர் நிறைந்த மார்ச் காலையில் அவரை உலகப்புகழ் தேடி வந்தது - எமன் வடிவில். அன்று தன் வேலை முடிந்து அவர் வீடு திரும்பி தன் காரை நிறுத்தி விட்டு திரும்பியபோது அவனை கவனித்தார். வேகமான அவனின் நடையே அவருக்கு தீவிரம் உணர்த்த நூறு அடி தொலைவிலிருந்த தன் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார். அதற்குள் அவன் அவரை நெருங்கி தன்னிடமிருந்த கத்தியால் அவரை குத்த ஆரம்பித்தான். காப்பாற்ற சொல்லி அவர் அலற எதிரே இருந்த அப்பார்ட்மெண்ட்டில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. யாரோ "ஏய்! அவளை விடுடா!!!" என்று கத்தினார்கள். அவன் ஓடிவிட்டான். விளக்குகள் அணைந்தன. ஒரு அமைதி சூழ்ந்தது. கிட்டி மெல்ல மெல்ல தவழ்ந்து தன் அப்பார்ட்மெண்டின் கதவை அடைந்தார். ரத்தம் ஒழுக ஒழுக அவர் கிடக்க, அவன் மீண்டும் வந்தான். பின்னாளில் அவனிடம் கேட்டப்போது "வேலையை முடிக்க வந்தேன்" என்றான். ஆடைகளை அறுத்தான். பலாத்காரம் செய்தான். பின் மிச்சமிருந்த உயிரை குத்தி பறித்து விட்டு அந்த இடத்தை விட்டு சென்றான். இது நடந்த நேரம் முழுவதும் கிட்டி அலறி, அழுதுக்கொண்டிருந்தார். 38 பேர் கேட்டார்கள். கேட்டாலும் உதவத்தான் யாருமில்லை. 

எல்லாம் முடிந்து போலீஸ் வந்தப்போது அவர்கள் கேட்ட முதல் கேள்வி - இத்தனை பேரில் ஒருத்தருக்கு கூடவா முதல் முறை சத்தம் கேட்ட உடனே போலீசை கூப்பிட தோணவில்லை? என்றதுதான். அதற்கு அவர்கள் சொன்ன பதில் அமெரிக்காவையே உலுக்கியது.
"ஏதோ லவ்வர்ஸ் பிரச்சினைன்னு நினைச்சேன்"
"நான் கூப்பிட போனேன். எதுக்கு வம்புன்னு என் பொண்டாட்டி தடுத்துட்டா"
"யாராவது கூப்பிடுவாங்கன்னு நினைச்சேன்"
இதை விட அனைவரையும் உலுக்கிய பதில் - "நான் பார்த்துக்கிட்டிருந்தேன். ரொம்ப டயர்டா இருந்தது. தூங்க போய்டேன்."

இதை சொன்னவர்கள் யாரும் மோசமானவர்களில்லை. மனப்பிரச்சினை உள்ளவர்கள் இல்லை. யாருக்கும் இறந்தவருடன் பிரச்சினையில்லை.பின் ஏன்?

பெருநகர மக்களின் பொது குணம் என்று ஒதுக்கி விட்டு போகாமல் உளவியல் நிபுணர்கள் காரணத்தை ஆராய இறங்கினார்கள். பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அவற்றின் முடிவில் சில பொதுவான விஷயங்கள் புரிந்துக்கொள்ளப்பட்டது.

தனிப்பட்ட முறையில் அந்த அபார்ட்மெண்ட்டில் இருந்த அனைவருமே அவருக்கு உதவியிருப்பார்கள். ஆனால் ஒரு குழுவாக ஒன்று சேரும்போது அவர்களிடையே ஒரு மௌனப்பரிமாற்றம் நடைப்பெறுகிறது. "நாம் ஏன் செய்ய வேண்டும்? இத்தனைப்பேர் இருக்கிறார்களே... அவர்களில் யாராவது செய்யட்டுமே" என்ற தட்டிக்கழித்தல் தொடங்குகிறது. இதை Diffusion of Responsiblity என்கிறார்கள். கூட்டம் கூட கூட உதவிக்கு வரும் எண்ணம் குறைய ஆரம்பிகின்றது. இதைத்தான் Bystander Effect என்கிறார்கள்.

பொதுவில் அறிமுகமில்லாத ஒருவருக்கு உதவ வேண்டுமென்பதில் எல்லோரும் சில கட்டங்களை கடந்தாக வேண்டும்.
1. கவனித்தல்: ஒரு விபத்தோ, ஒரு அலறலோ சட்டென்று கவனிக்கப்படும். ஆனால் பிசியான தெருவில் மயங்கிக்கிடக்கும் மனிதன் அந்த பின்புலத்தில் ஒன்றாகிறான். ஒரு வேளை அவனை கவனித்தாலும் அதை கருத்தில் கொள்ள மறுக்கிறோம். இதே யாருமேயில்லாத தெரு. நாம் மட்டும் தான் அங்கே இருக்கிறோம் என்னும் போது அவனை நம்மால் அவ்வளவு எளிதாக ஒதுக்க முடியாது. காரணம் நாம் பொதுவில் எது சரியென்று கருதுவது."நாம் போய் பார்த்தா சீன் போடறோம்னு ஆயிடுமோ?" என்ற எண்ணம் துவங்கும் போதே நமக்கு அதை தவிர்க்கும் ஒரு கூச்சம் வந்து விடுகிறது. மனம் அதை கவனத்திலிருந்து தள்ளுகிறது.

2. புரிதல்: அது நம் உதவி தேவைப்படுகிற இடமென்று புரிய வேண்டும். முந்தய உதாரணத்தில் சொன்ன நபர் ஒரு மதுக்கடையின் முன் விழுந்து கிடக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேலை நாம் கவனித்தாலும் உதவ தயங்குவோம். காரணம் குடிகாரனுக்கு உதவுவது தவறென்ற நம் சமுதாயப்பார்வை.தனியே கேட்டால் "ச்சே! குடிகாரன்னா என்ன சார்... என்ன ஆச்சுன்னு போய் பாக்கிறதுக்கு என்ன..." என்பார்கள். ஆனால் கூட்டத்தில் ஒன்றாக இருக்கும் போது  "அதான் இத்தனை பேர் பார்த்துட்டு போறாங்களே...  தெரியாமலா போறாங்க..." என்பார்கள். இதற்கு Pluralistic Ignorance என்று சொல்கிறார்கள். குடிகாரன் என்றால் உதவக்கூடாது என்ற கண்ணோட்டம் தவறென்று தெரிந்தாலும் அது சமுதாயப்பார்வை என்று யாரும் ஏதும் செய்ய தயங்குவார்கள். டில்லி கற்பழிப்பில் அந்த மாணவிக்கு யாரும் உதவ முன் வராததற்கு சொல்லப்பட்ட காரணம், அந்த பெண் நிர்வாணமாக கிடந்ததால் அவள் தவறானவள் என்று பலர் எண்ணியதுதான்.

3. பொறுப்பெடுத்து கொள்ளல்: ஒரு விபத்து... பல வாகனங்கள் நிற்கின்றன... சிலர் இறங்கிப்போய் பார்க்கிறார்கள்... உடனே திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும் மனிதர்களுக்கும் உடனிருந்து உதவி செய்யும் மனிதர்களுக்கும் எங்கே வித்தியாசம் வருகிறது... உதவலாம் என்ற எண்ணம் செயலாக அந்த பொறுப்பை எடுத்துக்கொள்ள சில வித்தியாசங்கள் மனிதர்களிடம் உண்டு...
1. யாருக்கு உதவி தேவை... சமுதாயத்தில் சிலர் வீக் என்று கட்டமைக்கப்பட்டுள்ளது... பெண்கள்,குழந்தைகள் இப்படி...யாராயிருந்தாலும் அவர்களுக்கு உடனே உதவுவார்கள்...பெண்களுக்கு அதிகம் பேர்  உதவுவது இதனால்தான். சில திரைப்படங்களில் சொல்லுவது போல் பாலுணர்வினால் மட்டுமல்ல...
2. உதவ முடியும் என்ற நம்பிக்கை  நெடுஞ்சாலை விபத்துகளில் உதவாது போகும் பலர் சொல்லும் காரணம் - அங்கே ஏற்கனவே நிறைய பேர் இருக்காங்க... இதுல நான் போய் என்ன பண்ண முடியும்...
இறங்கிப்பார்த்தால் தானே தெரியும்.. எது தடுக்கிறது???
நம்மால் உதவ முடியுமா என்ற சந்தேகம், நம்மை விட உதவக்கூடியவர்கள் இருந்து அவர்கள் நம்மை அவமானப்படுத்தி விடுவார்களோ என்ற பயம், சட்டரீதியான சிக்கல்கள், நாம் செய்வது சரியா? தவறா? என்று தெரியாத நிலை...

இந்த பயங்களையும் சந்தேகங்களையும் தாண்டும் மனிதர்களே உதவி செய்ய இறங்குகிறார்கள்...

4. என்ன உதவி செய்வது? ஒரு விபத்து நடந்து பார்த்திருக்கிறீர்களா? ஒரு களேபரமான சூழல் நிலவும் அங்கே... சிலர் அடிப்பட்டவர்களை தூக்குவார்கள்... சிலர் வாகனங்களை வழி மாற்றுவார்கள்... சிலர் ஆம்புலன்சை அழைப்பார்கள்... இதுதான் செய்ய வேண்டும் என்று எப்படி முடிவெடுக்கிறார்கள்... அது அவரவர்கள் அனுபவத்தையும், தன்னம்பிக்கையையும் பொருத்தது...

இத்தனையும் எழுத பேசத்தான் நிறைய நேரமாகும்... நிஜ வாழ்வில் இதை  மனதளவில் கடப்பதற்கு சில நொடிகளே ஆகும்...

இது போன்ற ஆராய்ச்சிகள் மனிதம் மறக்கும் காரணத்தை சொல்கின்றன... இது போன்ற உதவாத கரங்கள் எந்த ஒரு நாட்டின், இனத்தின் தனிப்பட்ட சொத்துக்கள் இல்லை. இன்றைய தினம் உலகின் அனைத்து நாடுகளிலும் மனிதம் தழைக்க என்ன வழி என்று யோசிக்கிறார்கள்... Prosocial Psychology என்று குழந்தைகளிடம், வேலை செய்யும் இடங்களில் என்று பல்வேறு நிலைகளில் அதற்காக முயற்சிக்கிறார்கள்... பல நம்பிக்கை தரும் வெற்றிகளும் பெற்று வருகிறார்கள்...

Tuesday, June 4, 2013

பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

பிரச்சினைகள் இல்லாத குடும்பமில்லை. என்னிடம் வேறு காரணங்களுக்காக வரும் பெண்கள் கூட தங்களின் கணவர்களைப் பற்றி பேசும் போது ஒரு குறையுடனே பேசுகிறார்கள். பல சமயங்களில் அது கணவன் தன்னுடன் இருக்கும் நேரம் போதவில்லை என்பதே. நேரம் என்று இங்கு குறிப்பிடுவது “Quality Time”. தன்னுடன் பேச, சிரிக்க, இன்று என்ன நடந்ததென்று கேட்க நடந்ததை சொல்ல என்று கணவர்கள் நேரம் செலவழிப்பதில்லை என்பதே அவர்களின் வருத்தம். இன்னும் ஒரு சாரார் உண்டு. “லவ் மேரேஜ்தான் சார். லவ் பண்ணப்போ விழுந்து விழுந்து கவனிச்சார். இப்போ கண்டுக்கறதேயில்லை” என்று. இவர்கள் யாரும் கணவர் நல்லவரில்லை என்று சொல்வதில்லை. 

“நல்லவர்தான் ஆனால்...” 

பல சமயங்களில் இவர்கள் கணவர்களிடம் பேசினால் “பேசாம இல்லையே சார்! பாருங்க போன வாரம் கூட வெளியே போனோம்... நான் எல்லாம் நல்லாத்தான் பண்ணறேன்... இவதான் என் ஒர்க் புரிஞ்சுக்காம உயிரை எடுக்காரா சார்!” என்பதே இவர்களின் பதிலாய் இருக்கும். 

யார் மேல் தவறு?

உண்மையில் இருவர் பேரிலும் இல்லை. இது இயற்கையும், சமுதாயமும் நம்மை வயரிங் செய்ததில் உள்ள பிரச்சினை. 

ஆண்கள் அடிப்படையில் உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பு கொடுப்பதில்லை. அவர்களுக்கு கோடிட்ட இடங்களை நிரப்ப தெரியாது. தரப்படும் குறிப்புகளை புரிந்துக்கொள்ள தெரியாது. நான் உனக்காக சம்பாதிக்கிறேன். உனக்கு உண்மையாக இருக்கிறேன். உன்னிடம் உள்ள அன்பை வெளிக்காட்ட இது போதும் என்பது ஆண்களின் கட்சி. காதில் வந்து காதல் சொல்ல வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றாது. அது செயற்கை என்றுக்கூட அவர்கள் நிராகரிப்பார்கள். To them, action means appreciation. காரணம் அவர்களுக்கு அது தேவையில்லை. அதே போல் நம் சமுதாயமும் ஆண்கள் காதல் உணர்வுகளை வெளிக்காட்டுவதை ஒரு அசூயையுடனே பார்க்கிறது. கிண்டல், அவமானப்படுத்துதல் மூலம் அந்த உணர்வுகளை தடுக்கவே செய்கின்றது. காதலிக்கும் போது கவிதை எழுதினேன் என்பதை நடுத்தர வயதில் தைரியமுடன் ஒப்புக்கொள்ளும் ஆண்கள் எத்தனை பேர்? 

இதற்கு நேர்மாறாக பெண்களின் அன்பு வெளிப்படுவது வேறுவகையில். அவர்கள் எதிர்ப்பார்ப்பது “உணர்வு கலந்த” பாராட்டை. இட்லி சாம்பார் செய்வதில் இருந்து இதிகாசம் எழுதுவது வரை எது செய்தாலும் பெண்கள் பாராட்டை எதிர்ப்பார்க்கிறார்கள்.

“சாப்பாடு எப்படி இருந்துச்சு?”
“ஹ்ம்ம்!! நல்லா இருந்துச்சு...”
“ஏன் அத சொன்னா என்னவாம்? வாயே வராதே...”
“சாப்பாடு மிச்சம் வைக்காம சாப்பிட்டாலே அதான் அர்த்தம்”

இது போல உடையில், நகையில் என எல்லாவற்றிலும் பெண்கள் பாராட்டை எதிர்ப்பார்க்கிறார்கள். கிடைக்காதப்பொழுது ஏமாற்றம் அடைகிறார்கள். எல்லா பெண்களும் எல்லா நேரங்களிலும் இதை எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனால் எதிர்ப்பார்க்காத பெண்கள் யாருமில்லை. 
இது பெண்களுக்கு மட்டுமே உள்ள குணமா? என்றால் ஆண்களும் பாராட்டை விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அது தன் மனைவியிடமிருந்தே வர வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஆணின் மிக முக்கிய அங்கீகாரம் சமுதாயத்திடமிருந்துதான். 
இதற்கு பல்வேறு உளவியல் காரணங்கள் சொல்கிறார்கள். பரிமாண வளர்ச்சியில் பெண்களின் நோக்கம் இனவிருத்தி. ஆகவே பெண் மிருகங்கள் ஆண் மிருகங்களின் ஈர்ப்புக்காக போட்டி போடுகின்றன. காரணம் எந்த இனத்திலும் பெண் மிருகங்களின் குழந்தை பெறும் தன்மையிருக்கும் காலம் மிக குறைவு. ஆண்களுக்கு அதிகம். அதுவே ஒரு ஆண் மிருகம் பல பெண் மிருகங்களை தேடி செல்ல வாய்ப்பாக அமைகிறது. இது சமூக சட்டங்களால் கட்டப்பட்ட மனித சமுதாயத்தில் வேறு விதமாக மாற்றம் கொள்கிறது. பெண் ஆணை தக்க வைக்க போராடுகிறார்கள். அதன் ஒரு பகுதியே என்னைப்பார், என்னை பாராட்டு என்ற இந்த மறைமுக இறைஞ்சல். இது ஒரு சாராரின் வாதம்.

இது ஆணாதிக்கம் நிறைந்த வாதம். எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாதது. பலர் ஏற்கவுமில்லை. அதன் மாற்றாக வேறு ஒரு வாதம் உண்டு.

இந்த சமுதாயத்தில் பிறந்த உடனேயே ஆண் பெண் என இரு பாலினங்களுக்கும் சில விதிகள் வகுக்கப்படுகின்றன. ஆண் –வெளியில் விளையாட வேண்டும்; உடல் சார்ந்த விளையாட்டு அதிகம் வேண்டும். பெண்களோ- அழகியல் சார்ந்த விளையாட்டுகள் அதிகம் ஈடுபட வேண்டும். கோலம் போடுவது,தையல் இப்படி பிறந்ததிலிருந்து அழகியலை, அதற்கான பாராட்டை எதிர்பார்ப்பதையும் இந்த சமூகம் பெண்களிடம் ஊட்டுகிறது. ஆனால் ஆண்களுக்கு இந்த அழகியல் சார்ந்த விஷயங்கள் “பொம்பளை சமாச்சாரம்” என்று ஒதுக்கவே சமூகம் கற்றுக் கொடுக்கிறது. இது தலைமுறையாய் தொடரும் போது, அப்பாவை ஆதர்சமாய் கொள்ளும் மகன்களும், அம்மாவிடம் அப்பா நடந்தது போலவே நடக்கிறார்கள்.

“சமையல்லாம் ஒரு மேட்டரா? டிரஸ் நகையெல்லாம் நான் select செய்ய 5 நிமிஷம் கூட ஆகாது. அதெல்லாம் பாராட்ட வேண்டியதில்லை”.

ஆகவே பாராட்டை எதிர்பார்க்காமல் ஒரு பெண் இருக்க வேண்டுமானால், அவள் ஆண்கள் மட்டுமுள்ள சமூகத்திலிருந்தால்தான் சாத்தியம். (முக்கியமான ஒன்று! இது பொது விதி. விதி விளக்குகளை தவறு சொல்வதில்லை இதன் நோக்கம்.)

அப்படியென்றால், “ஹையோ! எப்படி அழகாக பல் விளக்கறே! ச்சே! இப்படியெல்லாம் யாருமே வாய் கொப்பளிக்க மாட்டாங்க தெரியுமா!” என்று காலையிலிருந்து ‘பின்றேம்மா! எப்படி இப்படி கொட்டாவி விடறே!” என்று இரவு தூங்கும் வரை விரட்டி விரட்டி பாராட்டி மிரட்ட வேண்டுமா? 

மீண்டும் கவனித்துப்பாருங்கள். நான் சொன்னது “உள்ளம் கனிந்த” பாராட்டை. சட்னி வைக்கும் முன்னமே சூப்பர் என்றால் பெண்கள் கணித்து விடுவார்கள். அவர்களுக்கு அது தேவையுமில்லை. அடுப்படியின் வெப்பத்தில் வெந்து, தன கவனம் முழுவதும் செலுத்தி, ருசி வர வேண்டும் என்ற அக்கறையுடன் செய்ததை பாராட்ட வேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பு. அதுதான் பெண்கள் பாஷையில் romance. .

நம் குடும்பங்களில் வரும் பிரச்சனைகளுக்கு காரணம் பெண்களின் எதிர்பார்ப்பில்லை. எது அவசியம் என்ற ஆண் – பெண் பார்வையின் வேறுபாடே. 

ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள்?

தனக்கு அடிமையாக வேண்டும் என்பதில்லை. தான் எந்நேரமும் கவனிக்கப்பட வேண்டும் என்பதில்லை. தன் தேவையை தானே சொல்லாமல் புரிந்து கொள்ளும் புரிதலை....

Sunday, February 24, 2013

உலகின் சிறந்த முன்னுரை...


இந்த முன்னுரை எழுதியது தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். யார்? என்ன புத்தகம் என்று சொல்லும் முன் இதை படித்துவிட்டு வாருங்கள்.

இந்த பைத்தியக்கார உலகத்தில் பல பைத்தியக்கார விடுதிகளும் இருக்கின்றன. ஒருமுறை அவற்றில் பலவற்றுக்கு நான் விஜயம் செய்தேன். என்ன காரணம் என்று கேட்கிறீர்களா? என்னவோ ஒரு பைத்தியக்காரத்தனம். பைத்தியங்களுக்கு அவர்கள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் ஒரு காரணம் உண்டு. ஆனால் அந்த காரணம், நடைமுறை உலகத்தின் கண்களுக்குப் புரிவதில்லை; பொருந்துவதுமில்லை. எனவே அவர்களை ஏதோ ஒரு பெயரைச் சூட்டி நாம் ஒதுக்கி வைத்து விடுகிறோம்.

பைத்தியம் என்றுபெயர்சூட்டப்பட்டவர்களை மட்டுமே நம்மால் ஒதுக்கிவைக்க முடிகிறது. ஆனால் பைத்தியக்காரதனத்தையே நம்மால் ஒதுக்கி வைத்து விட முடிகிறதா? பிறருக்குத் தெரியாத, தெரிந்து விடுமோ என்று நாம் அஞ்சுகிற,தெரிந்து விடக்கூடாது என்று நாம் காப்பாற்றி வைத்திருக்கிற, ஒரு வேளை தெரிந்திருக்குமோ என்று எண்ணி அடிக்கடி தலையைச் சொரிந்து கொள்கிற எத்தனை ஆயிரம் பைத்தியக்காரத்தனங்கள் நம் ஒவ்வொருவரிடமும் குடிகொண்டிருக்கின்றன! இப்படிப்பட்ட நாம், அந்தப் பைத்தியக்காரதனங்கள் வெளியே தெரிந்து விட்டதென்ற ஒரே காரணத்தினால் அவர்களை விலக்கி வைத்தது கூடச் சரி –என்றைக்குமே வேண்டாமென்று அவர்களைச் சபித்துவிட என்ன உரிமை பெற்றிருக்கிறோம்?
ஒரு மன நோயாளி பூரணமாய்க் குணம் பெற்றுவிட்ட பின்னும் கூட இந்த உலகம் அவரைத் தொடர்ந்து சந்தேகிக்கிறது; கேலி பேசுகிறது;தனிமையில் அவரிடம் சிக்க அஞ்சுகிறது. ஒரு குழந்தையை அவர் கொஞ்சினால் அந்தக் குழந்தைக்கு என்ன நேருமோ என்று உள்ளம் பதைக்கிறது; அவரோடு ஓர் அறையில் தனித்திருக்க அவர் மனைவியே அஞ்சுகிறாள்.இப்படிப்பட்ட செய்கையினால் இந்த உலகம் மீண்டும் அவரை அந்த விடுதிக்கே திருப்பி அனுப்பி விடுகிறது.உலகத்தின் அப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனத்தைத் தரிசித்து விட்டுத் திரும்பி வந்த சிலரையும் நான் அங்கே சந்தித்தேன். உலகம் அவர்களைக் கண்டு அஞ்சுவதைப் போலவே, அவர்களும் இந்த உலகத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.அவர்கள் உலகத்தைவிட இது பெரிய உலகமல்லவா? அதாவது, பெயர் சூட்டப்பட்ட அந்த பைத்தியக்கார விடுதியைவிட, பெயர் சூட்டப்படாத இந்த உலகம் பெரிய பைத்தியக்கார விடுதியல்லவா? எனவே நமக்கு அஞ்சி அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்.
அவர்களின் உள் உலகம் மிகவும் ஆனந்தமயமாய் இருக்கிறது போலும்! அந்த லயிப்பில்தான் அவர்கள் புற உலகத்தையும் உங்களையும் என்னையும்- மறந்து செயல்படுகிறார்கள்.
மனிதர்கள் செய்யாத எதையும் அவர்கள் செய்துவிடவில்லை. அவர்கள் அழுகிறார்கள், சிரிக்கிறார்கள், பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், பேசுகிறார்கள், அன்பு செய்கிறார்கள், நன்றி காட்டுகிறார்கள். நாம் செய்யக்கூடிய எல்லாவற்றையும் அவர்களும் செய்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் பைத்தியக்காரர்கள்!
அந்தக் கோடு எங்கே கிழிக்கப்பட்டது?
சற்று நேரத்துக்கு முன் உங்களது தனியறையில் உடை மாற்றிக் கொண்டபோது நீங்களும் நிர்வாணமாய் நின்றிருந்தீர்கள், நினைவிருக்கிறதா? அதுபோல் அவர்கள் தங்கள் தனி உலகத்தில் அவ்வாறு நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள்!
ஒரு மெல்லிய ஸ்க்ரீன் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு கோடு கிழித்திருக்கிறதே!
அன்றொரு நாள் அளவுக்கு மீறிய கோபத்தில் கையிலிருந்த பாத்திரத்தை வீசி எறிந்து உடைத்தீர்களே, நினைவிருக்கிறதா? அதற்கு ஆயிரம்தான் காரணம் இருக்கட்டும்.அந்தச் செய்கையை நீங்கள் நியாயப்படுத்த முடியுமா? அதைப்போல அவர்களும் சில சமையங்களில் செய்ததும் உண்டாம். ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள்!
நான் பாடிக் கொண்டிருக்கிறேன். எனது பாடலைக் கேட்க ஒருவருமே இல்லையென்று எனக்குத் தெரியும். அந்தத் தனிமையில் தொண்டையைக் கிழித்துக்கொண்டு, என் செவிக்கு இது இனிமையாக இருப்பதால் என்னை மறந்த உற்சாகத்தில் நான் பாடிக் கொண்டிருக்கிறேன். 
நான் கேட்கிறேன்: இதற்கு என்ன பெயர்? அதே போல் அவர்களும் தங்கள் தங்கள் உற்சாகம் கருதிப் பாடுகிறார்கள். அதே மாதிரியே சில சமயங்களில் அதே மாதிரி உற்சாகமான லயிப்புடன் அவர்கள் அந்தத் தனிமையில் அந்தரங்கமாக தம்முடன் பேசுகிறார்கள்! ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள்! 
அளவுக்கு மீறிய சந்தோஷத்தினால், அல்லது துயரத்தினால் எத்தனையோ இரவுகள் உறக்கமின்றிப் படுக்கை கொள்ளாமல் பெருமூச்செறிந்து கொண்டே, மனம் சிலிர்த்து சூரியோதயம் வரை நீங்கள் விழித்துக் கொண்டிருக்கவில்லையா? 
அதைப் போல் அவர்களும் இருப்பதுண்டு. ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள்!
 விஷயம் இதுதான்: நாம் எப்போதேனும் இப்படி எல்லாம் இருக்கிறோம். அவர்கள் எப்பொழுதுமே இப்படி இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்; நாம் வெளியே இருக்கின்றோம்.
இந்த ‘எப்போதோ’வும், இந்த ‘எப்போதுமே’வுந் தான் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை உண்டாக்கி விட்டன!
இதன் அடிப்படையான வித்தியாசம் என்னவெனில், நமது காரியங்களுக்கான காரணத்தை நாம் நியாயப்படுத்த முடிகிறது. அவர்களால் நியாயப்படுத்த முடியவில்லை; அதாவது அவர்கள் நியாயம் நமக்குப் பிடிபடுவதில்லை. 
அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகமாக இருக்கிறார்கள்; தனி உலகமாக இயங்குகிறார்கள்.நாம் எவ்வளவுதான் தனிப்பட்ட முறையில் பைத்தியக்காரர்களாக இருந்தாலும் ஒரு பொதுவான நியாயத்திற்கு உட்பட்டு விடுகிறோம். அவர்களுக்குப் பொதுவான நியாயம் என்று ஒன்று இல்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தங்களுக்குள்ளையே மாறுபட்ட தனித்தனி நியாயத்தின் அடிப்படையில் தனித்தனியே இயங்குகிறார்கள். எனவேதான் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்.
கண்டுப்பிடித்தீர்களா?

தெரியாதவர்களுக்கு....

இதை எழுதியவர் ஜெயகாந்தன். 



அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்ற புத்தகத்தின் முன்னுரை இது. ஜெயகாந்தனுக்கு அறிமுகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது அதிகப்பிரசங்கித்தனம். ஆனால் இது எழுதப்பட்டது 43 ஆண்டுகள் முன்பு எனும்போது அவரின் தீர்க்க சிந்தனையை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் இது எழுதி 43 வருடங்கள் ஆகியும் இதில் குறிப்பிட்ட வரிகள் உண்மையாய் இருப்பது மனநலம் பற்றிய விழிப்புணர்வில் எந்தளவுக்கு நாம் பின்தங்கியுள்ளோம் என்று தெரிகிறது.

வேறொரு இடத்தில் உடம்புக்கு காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், அஜீரணம் என்றெல்லாம் வருகிற மாதிரி மனத்துக்கும் நோய்கள் ஏற்படுவது உண்டு. அவைதாம் பயம், கோபம், சந்தேகம், கவலை என்பன. உடலுக்கு நோய் தருகிற கிருமிகள் நம்மைச் சுற்றிலும் நிறைய உண்டு. நம் உடலிலே கூட அவை இருக்கின்றன. அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிற திறன் நம்மிடம் பலமாக இருக்கிறவரை அவற்றால் நாம் பாதிக்கப்படுவதில்லை. அதே போன்று கோபம், சந்தேகம், பீதி,வெறுப்பு முதலிய இயல்புகளினால் நாம் பாதிக்கப்படாமலிருக்கிற அறிவு(reasoning)  பலமாக இருக்கிறவரை நம்முடைய மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. உடம்பு மாதிரியே மனம் சம்பந்தப்பட்ட கூறுகளிலும் ஆரோக்கிய மனமும், எப்போதோ சில சமயம் பாதிக்கப்படுகிற மனமும், அடிக்கடி பாதிக்கப்படுகிற மனமும், அடிக்கடிப் பலமாகப் பாதிக்கப்பட்டு வைத்திய உதவியுடன் தேறுகிற உடல் போன்ற மனங்களும், நிரந்தரமாகவே, தீர்க்க முடியாத அளவுக்கு நோயில் விழுந்துவிடுகிற மன நோய்களும் இருக்கின்றன என்று குறிப்பிடுகிறார். மன நோய்கள் நிரந்திரமா? மனநல மாத்திரைகள் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்பது போன்று இன்றளவும் உள்ள கேள்விகளுக்கு இதை விட தெளிவாக ஒரு மனிதனால் விளக்க முடியாது.  

இந்த நூல் ஒரு மூன்று கட்டுரை தொடர்களின் தொகுப்பு. வெறும் 150 பக்கங்களுக்குள் தான் இருக்கிறது. மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளார்கள். ஐம்பது ரூபாய்தான். வாங்கி படியுங்கள். நம் வாழ்வின் எல்லைகளுக்குள் வராத வந்தும் தினசரி நிகழ்வாய் ஒதுக்கப்பட்ட மனிதர்களை சந்திப்பீர்கள்.

Tuesday, February 19, 2013

Stress - அறிந்த வார்த்தை அறியாத அர்த்தங்கள்... 3

Stress பற்றிய இந்த தொடருக்கு மிக நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. இந்த முறை முழுமையாய் முடித்து விடுவதென்கின்ற உறுதியுடன் ஆரம்பிக்கிறேன். மீண்டும்...

சென்ற பதிவில் stress என்றாலே கவலை, பதட்டம்  தரும்  விஷயங்களால் உருவாவதா? என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன். அதற்கு பதில் சொல்ல நாம் சற்றே மற்றொரு கேள்வியை பார்க்க வேண்டும்.

Stress என்றால் என்ன?

மறுபடியும் முதல்லயிருந்தா???... என்று களைப்படைய வேண்டாம். கேள்வியை சற்றே மாற்றி கேட்கலாம்.

Stress என்ற வார்த்தை எதைக்குறிக்கிறது?

பதட்டம், படபடப்பு என்று நாம் உணரும் உணர்ச்சியையா? இல்லை அது  போன்ற உணர்ச்சியை தரும் சூழலையா?

Stress பற்றிய ஆராய்ச்சியின் பிரச்சினையே இதுதான்!!! Stress என்பது ஆரம்ப காலங்களில் பயன்படுத்தப்பட்ட அர்த்தம் வேறு. இன்று அது குறிக்கும் அர்த்தம் வேறு. ஆகவே குழப்பத்தை தவிர்க்க இன்று Stress பற்றி பேசும்போது வேறு சொற்கள் பயன்படுத்துகிறார்கள்.

மனித வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாது. அந்த மாற்றங்கள் எல்லாமே நம்முள்ளே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கத்தை ஒவ்வொருவருமே தமக்கேயுரிய வழிவகைகளில் எதிர்க்கொள்கிறோம். ஒரு வேளை நம்மால் எதிர்க்கொள்ள முடியாவிட்டால்... பிரச்சினைதானே.

ஆகவே தர்க்கரீதியாகப்பார்த்தால் எல்லா மாறுதலுமே நம்மை பாதிக்கும் அபாயமுள்ளது. அது காலையில் எழுந்து பஞ்சர் ஆன வண்டியைப் பார்க்கும் எரிச்சலாகட்டும்... நம் நெருங்கிய சொந்தங்கள் இறக்கும் போது ஏற்படும் வருத்தமாகட்டும்.... பிரச்சினையே... இப்படிப்பட்ட விஷயங்களை Stressors என்று அழைக்கிறார்கள்.

நாம் அனைவரும் பிரச்சினைகளை "தமக்கேயுரிய" வழிவகையில் எதிர்க்கொள்கிறோம் என்று சொன்னேன். இதில் "தமக்கேயுரிய" என்பதுதான் முக்கியம். இந்த தனிமனித வேறுபாடுதான் எந்த ஒரு மாறுதலையும் நாம் சமாளிக்க முடியுமா? முடியாதா? என்று தீர்மானிக்கும். இதுதான் தினம் சாவை எதிர்நோக்கும் போர்வீரனை சிரிக்க வைக்கிறது, ஒரு சின்ன கண்டிப்பை கூட தாங்க முடியாமல் சோகப்பட வைக்கிறது. இந்த வித்தியாசத்தை தான் அதாவது பிரச்சினைகளை எதிர்கொள்ள கையாளும் விதத்தைதான் Stress reactivity என்று சொல்கிறார்கள்.

இறுதியாக இந்த மாறுதல்கள் எல்லாமே நம்மிடையே ஏற்படுத்தும் மாற்றங்கள், மனரீதியாக இருக்கலாம். சில சமயம் உடல் ரீதியாக இருக்கலாம். இந்த மாற்றங்களை Stress Sequlae அல்லதுStrain என்று சொல்கிறார்கள்.

பிரச்சினை,அதை எதிர்கொள்ளும் விதம், அதனால் ஏற்படும் விளைவுகள்,இந்த மூன்றும் சேர்ந்ததுதான் Stress.

ஒரு சுற்று சுற்றி மீண்டும் ஆரம்பித்த கேள்விக்கு (சற்றே மாற்றியமைத்துக்கொண்டு) வருவோம்...

Stressors என்றாலே கவலை, பதட்டம்  தரும்  விஷயங்கள் தானா?...

Stress ஆராய்ச்சியின் ஆரம்பகாலங்களிலேயே மாற்றம் எதனால் ஏற்பட்டாலும் அது ஏற்படுத்தும் உடலியல் மாற்றங்கள் ஒன்று தான் என்று உணர்ந்திருந்தனர். ஆகவே நல்ல நிகழ்வுகளால்(உம். திருமணம்) வரும் அழுத்தத்தை Eustress என்றும் விரும்ப தகாத நிகழ்வுகளால்(உம். மரணம்) வரும் அழுத்தத்தை Distress என்றும் குறிப்பிட்டார்கள்.

எந்த எந்த நிகழ்வுகள் அழுத்தம் தருபவை என்று உணராமல் எப்படி ஒருவரின் Stress அளவை கண்டறிவது? இதற்கு ஒரு வழிமுறையை கண்டறிந்தார்கள். நோயாளிகளின் வியாதிக்கும் வாழ்க்கை சம்பவங்களுக்கும் ஏதும்  சம்பந்தம் உள்ளதா எனப் பலரிடம் ஒரு சர்வே நடத்தினார்கள். அதனடிப்படையில் 43 வாழ்நாள் சம்பவங்களை மனிதனை மிகவும் பாதிக்க கூடியது முதல் அதிகம் பாதிப்பில்லை என்று வகைப்படுத்தினார்கள். இந்த வரிசையில் மிக அதிக அழுத்தம் தரக்கூடியது என்ற "வாழ்க்கை துணையின் இறப்பு" என்பதற்கு 100 புள்ளிகள். மிக குறைவாக சிறு சிறு சட்டமீறல்களுக்கு 11புள்ளிகள். இவை இரண்டுக்கும் நடுவே சிறிதும் பெரிதுமாய் பற்பல நிகழ்வுகளை பட்டியலிட்டு அதற்கேற்ப மதிப்பெண்ணும் தந்திருந்தார்கள். இவற்றுள் கடந்த ஒரு வருடத்தில் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் புள்ளிகளை கூட்டி மொத்தம் வருவதை வைத்து உங்களுக்கு Stress உடலை பாதிக்கும் அளவிற்கு இருக்கிறதா? என்று சொல்லலாம். இதை Holmes and Rahe Scale என்பார்கள்.

இந்த வழிமுறை இன்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. பல்வேறு ஆராய்ச்சிகள் இதன் உபயோகத்தை நிரூபித்துள்ளன. ஆனால் இதில் வரும் சம்பவங்கள் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையில் அழுத்தத்தை தரும் என்பது சிலரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இதிலிருந்து மாறுபட்டு வேறு ஒரு கண்ணோட்டத்தில் அணுகினார்கள்.

என்றேனும் நிகழும் நிகழ்வுகளை விட தினம் சந்திக்கும் நிகழ்வுகளிலேயே நாம் எரிச்சலடைகிறோம், வருத்தப்படுகிறோம், சந்தோஷப்படுகிறோம். மேலே சொன்னது போன்ற நிகழ்வுகள் நம்மில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்த கூடியவை. வியாதிகளுடன் அவற்றின் தொடர்பென்பதை எளிதில் நாம் கண்டுக்கொள்ளலாம். ஆனால் இந்த தினப்படி பிரச்சினைகளை நாம் கணக்கெடுக்க முடியாது. ஆனால் நீண்டகாலமாக ஒரு கல்லின் மேல் சொட்டு சொட்டாக விழும் தண்ணீர் அதை  தகர்க்கும் வலிமை பெறுவதை போல் இவை சிறுக சிறுக ஒரு மனிதனின் சமாளிக்கும் திறனை தகர்க்கிறது. இவையே ஒரு மனிதனை மிகவும் பாதிக்கும் என்றார்கள்.

ஆகவே கவலை, பதட்டம் என்றில்லை நீங்கள் சந்தோஷப்படும் போதும் உங்கள் உடல் அதை சமாளிக்க முயற்சிக்கிறது. எதுவானாலும் எல்லை மீறும் போதும் அது உடலை பாதிக்கிறது.

இது முதல் கேள்விக்கான பதில்.

 ஏன் சிலர் அதிகம் stress அனுபவிக்கிறார்கள்? சிலர் அனுபவிப்பதில்லை. Stressக்கும் உடலுக்கும் என்ன சம்பந்தம்?

அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

Wednesday, January 9, 2013

ஒரு முகாமும் சில சிந்தனைகளும்...


சென்ற வாரம் சொல்லிய முகாமின் அனுபவங்கள்....

எழுத்தின் வசீகரமே நாம் நினைத்துக்கொண்டு ஆரம்பிப்பதற்கும் எழுதி முடித்த பின் வருவதற்கும் உள்ள வித்தியாசம்தான். அது போன்ற ஒரு வசீகரமான அனுபவமாக இந்த முகாம் எனக்கு அமைந்தது. 7 நாட்கள், ஐநூற்றி சொச்சம் கிலோமீட்டர்கள், இருநூறை தொடும் ஆசிரியர்கள், அவர்களின் கதைகள், பிரச்சினைகள்... ஆஸ்பத்திரி, என்னை தேடி வரும் நோயாளிகள் என்ற வழக்கமான என் வாழ்க்கையில் இது ஒரு சமூக தரிசனமாய் இருந்தது.

இந்த பயணத்தில் நான் சந்தித்த முதல் சுவாரசியமான மனிதர் - விழுப்புரத்தின் முதன்மை கல்வி அதிகாரி திரு. முனுசாமி. விழுப்புரத்தில் நடந்த முதல் முகாமில் இவர் பேசியபோது இன்றைய தலைமுறை அதிகாரியின் பார்வை வெளிப்பட்டது. ஆசிரியர் மாணவர்கள் இடையே உள்ள பிணைப்பிற்கான இவரது அளவுகோல் அலாதியானது. ஒரு வகுப்பின் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்களின் பெயர்களை முழுமையாக சொல்ல முடியும் என்றாலே அவருக்கு அந்த வகுப்பில் ஈடுபாடு என்ற கருத்து அவரின் அனுபவ உளவியல் அறிவை காட்டியது. Kudos to him...

முதல் முகாமுடன் வரவேற்புரை, சிறப்புரை போன்ற அரசு விழாக்களின் சம்பரதாயங்களை தலை முழுகி விட்டு அடுத்தடுத்த நாட்களில் நடந்த முகாம்களில் தலைமை ஆசிரியர்களுடன் நேரடியாக பேச ஆரம்பித்த போது பல குமுறல்கள் வெளிப்பட்டன. அதை பற்றி சொல்லும் முன் இன்றைய கல்வித்துறையில் நடப்பதை நாம் சற்றே புரிந்துக்கொள்ள வேண்டும்.  கல்வித்துறை இரண்டு விஷயங்களை மிகவும் வலியுறுத்துகிறது. ஒன்று எந்த பள்ளியாக இருந்தாலும் நூறு சதவிகிதம் தேர்ச்சி. இரண்டாவது நூறு சதவிகிதம் கல்வி அதாவது பள்ளிக்கு வந்த எந்த மாணவரும் கல்வியை நிறுத்த கூடாது. இந்த இரண்டு விஷயங்களே அவர்களின் தலையாய கவலையாக இருக்கிறது.

என் கையேட்டில் தேர்வில் தோல்வி என்பது தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாய் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பல ஆசிரியர்கள் அதை விட அவர்களின் நேரடி அனுபவத்தில் உணர்ந்த காரணமாய் குறிப்பிடுவது இனக்கவர்ச்சியைதான். அதை எப்படி கையாளுவது என்று இன்னும் ஒரு தெளிவு அவர்களுக்கு ஏற்படவில்லை. அதை நசுக்குவது அல்லது கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது என்று அதீதமான நடவடிக்கைகளையே யோசிக்கின்றனர் . அதன் விளைவாக அந்த மாணவனோ மாணவியோ ஓடி போனாலோ தற்கொலை செய்து கொண்டாலோ என்ன செய்வது என்பதே அவர்களின் கவலையாக உள்ளது. அதை விட மிகவும் அதிர்ச்சி தந்தது "எது செஞ்சுகிட்டாலும் பரவாயில்லை. ஸ்கூல்ல பண்ணிட கூடாது" என்ற அவர்களின் கவலை. இந்த சிந்தனையை தொடர்ந்து கேட்டபோது பல நியாயமான காரணங்களை வெளியிட்டனர்.

"ஸ்கூல் பையன் இறந்தா அவங்க அப்பா அம்மா கேட்கற முதல் கேள்வி - வாத்தியார் ஏதும் செஞ்சுட்டிங்களா சார்?ன்னுதான். நாங்க அக்கறை எடுத்து ஒரு பையனையோ பெண்ணையோ கண்டிச்சா உடனே அவங்க ஏதும் பண்ணிக்கறாங்க. உடனே நாங்க எதுக்காக கண்டிச்சோம்ன்னு கேட்காம எங்கள அடிக்க வராங்க. அது விட மிக முக்கியமானது எங்கள் மேல துறை ரீதியா எடுக்கப்படற நடவடிக்கை. வீட்டு பிரச்சனைக்கு விஷம் குடிச்சுட்டு இங்க வந்து யாரும் இறந்தா கூட நாங்கதான் காரணமான்னு கேட்கறாங்க. இப்போல்லாம் எங்களுக்கு எந்த பாதுக்காப்பும் இல்லை. நல்ல விஷயம்னா கூட பசங்களை ஏதும் சொல்ல முடியலை. உடனே ஒப்பன்னா செத்து போயிடுவேன்னு மிரட்டுறாங்க. ஏன்டா வம்புன்னு இப்போல்லாம் கண்டிக்கறதே இல்லை."

முகாம் நடந்த ஒவ்வொரு தினமும் இந்த வார்த்தைகளை கேட்டேன். ஒரு வகையில் அவர்களின் நிலையை புரிந்துக்கொள்ள முடிந்தது. அடிப்பது,திட்டுவது தவறென்று மட்டும் சொல்லும் இந்த சமுதாயம் அவர்களுக்கு தவறு செய்யும் மாணவனை எதிர்க்கொள்வது எப்படி என்று சொல்லுவதில்லை. அதில் பத்திரிகைகளுக்கு அக்கறையுமில்லை. நமக்கு ஒரு பிரச்சனையின் முழுமையும் பார்க்க நேரமோ விருப்பமோ இல்லை. ஆகையால் பலியாடுகள் தேவைப்படுகின்றன.



அதே போல் ஆசிரியர்களுக்கு மாணவர் தற்கொலையோ தற்கொலை முயற்சியையோ தொடர்ந்து செயல்படுவது எப்படி என்ற வழிகாட்டு முறைகள் இல்லை. அவர்கள் அதன் பின் மற்ற மாணவர்களிடையே வரும் உளவியல் சிக்கல்களை தீர்ப்பது பற்றியும் என்ன செய்வதென்று ஒரு தெளிவில்லாமல் இருக்கின்றனர்.

அதை விட ஆசிரியர் மாணவர் இடையிலான உறவை மிகவும் சோதிப்பது - ஆசிரியர்கள் மேல் திணிக்கப்படும் கட்டாயங்கள். நூறு சதவிகிதம் தேர்ச்சி என்பதை அடையாதது ஒரு கொலை குற்றமாகவே கருதப்படுகிறது. மாணவர் தேர்ச்சி ஒரு ஆசிரியரின் பணி என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அது ஆசிரியரின் பணி மட்டுமே என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மாணவனுக்கு பள்ளி பிடிக்காமல் போக இருக்கும் பல காரணங்களில் ஒன்றே ஆசிரியரின் அணுகுமுறை. இன்றைய கல்விச்சூழலில் மாணவர்களுக்கு படிப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது. நல்ல ஆசிரியர் இருந்தாலும் வீடுகளில் உள்ள நிலைமையும் நண்பர்களின் வழிக்காட்டுதலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்படி இருக்க நூறு சதவிகிதம் தேர்ச்சி மட்டுமே அளவுகோலாக கொள்வது எப்படி சரியாகும்? ஒரு தலைமையாசிரியர் கேட்டார் - "நாங்க என்ன பாக்டரியா சார் நடத்துறோம்? மாணவனை உள்ளே போட்டு மார்க்கா மாத்தி கொடுக்கறதுக்கு?". இந்த கண்மூடித்தனமான மதிப்பெண் வழிபாடு சாதிப்பதென்ன? விளையாட்டு, கலை என்று எந்த ஒரு மன வளப்படுத்தும் விஷயங்களும் இல்லை. என்ன வகையில் நமக்கு உதவ போகிறது என்று தெரியாத ஒரு படிப்பு. அதிகாரிகள் ஆசிரியர்களை இடிக்க ஆசிரியர்கள் மாணவர்களை இடிக்கிறார்கள். இறுதியில் விளைவதென்னவோ ஆசிரியர் மாணவர்கள் பிரிவுதான்.

மற்றுமொரு குமுறல் வெளிப்பட்டது - வெளிப்பிரச்சனையில் மாணவன் தற்கொலை செய்துக்கொண்டாலும் அது பள்ளியில் நடந்தால் ஆசிரியர் பல பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியுள்ளது என்பதே. எல்லாம் சேர்ந்து இன்றைய பொழுது ஒழுங்காய் கழிந்தால் போதுமென்ற எண்ணமே ஆசிரியர்களிடம் உள்ளது. இது ஒரு அபாயகரமான போக்கு. மாணவன் ஆசிரியர் உறவென்பதை கற்றல் - கற்பித்தல் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக்கொண்டால் வெளியே வருவது செம்மறியாட்டுக்கூட்டமாய்தான் இருக்கும்.

இவர்களின் பிரச்சனையை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இவர்களில் பலர் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க விரும்பாதவர்களே. இவர்கள் இப்படி பாதுக்காப்பற்றதாய் உணர காரணம் என்ன? நாம்தான். ஒரு லட்சம் பேர் இருக்கும் கல்வித்துறையில் பத்து சதவிகிதமாவது கறுப்பாடுகள் இருக்க முடியும். ஆனால் அதை பொதுவான ஒரு பிம்பமாய் உருவாக்கும் போது  தன் மாணவனை வழிநடத்த வேண்டும் என்று நினைக்கின்ற சாதாரண ஆசிரியனும் பாதிக்கப்படுகிறான். "முன்னெல்லாம் எந்த ஒரு பிரச்சனையினாலும் ஆசிரியர்  சொன்னா உடனே நம்புவாங்க. இப்போ மாணவன் சொன்னா உடனே ஆசிரியர்களை அடிக்க வராங்க" என்ற ஆசிரியர்களின் குரலையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

ஆசிரியர்களிடம் தவறே இல்லையென்று சொல்கிறேனா? இல்லை. ஆசிரியர்கள் மேல் வைக்கப்படும் பல குற்றச்சாட்டுகளையும் அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். பலர் இன்னும் விஞ்ஞான வளர்ச்சியில் அக்கறையில்லாமல் இருக்கின்றார்கள். மாணவர்களை பாதிக்கும் முக்கியமான டிஸ்லெக்சியா போன்ற வியாதிகளைப் பற்றிய அடிப்படை தெளிவு கூட இல்லை. ஆனால் தண்டனைகள் மட்டுமே இதற்கு தீர்வாகாது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பின் கருத்தை கேட்டே இதற்கு தீர்வு காண வேண்டும். அதை விடுத்து "ஆசிரியர்களே அனைத்துக்கும் காரணம்" என்ற அணுகுமுறை கொண்டால் பிரச்சினைதான் முற்றும். அதே போல் ஆசிரியர்களும் "நான் ஆசிரியர் - நீ மாணவன் " என்ற அணுகுமுறையை விட்டு  மாணவர்களை அவர்களின் முதிர்ச்சியை மதித்து நடத்த வேண்டிய காலமிது என்பதை உணரவேண்டும். இரண்டாம் பெற்றோர்களாய் இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இன்று முதல் பெற்றோராய் இருக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது. அனைத்து பிரச்சினைகளையும் தெளிவாக மாணவர்களிடம் பேச வேண்டியதிருக்கிறது. இனக்கவர்ச்சி போன்ற விஷயங்களுக்கு இதுவே வழி என்று உணர வேண்டும்.

முகாம் இறுதியில் என் முயற்சியாக நான் அனுப்பிய அறிக்கையில் சில பரிந்துரைகளை கொடுத்துள்ளேன். ஆசிரியர்களுக்கு Stress reduction, Leadership பற்றிய முகாம்கள் மற்றும் டிஸ்லெக்சியா பற்றிய விழிப்புணர்வு முகாம் போன்றவற்றை நடத்த வேண்டும். மாணவர்களிடையே அவர்களின் பருவ மாற்றங்களை - குறிப்பாக அவர்களின் மனரீதியான மாற்றங்களை பற்றி விளக்க தனியே நேரம் ஒதுக்கப்பட வேண்டும். என்று என்னால் முடிந்தளவுக்கு சங்கை ஊதியுள்ளேன். பார்ப்போம்...

தீர்க்க முடியாத பிரச்சனைகள்... புரிந்து கொள்ள முடியாத, விரும்பாத மனிதர்கள் என்று அவநம்பிக்கைக்கு பல காரணங்கள் இருந்தாலும் நம்பிக்கை தரும் பல மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பழனிவேலு. நடுக்குப்பம் என்ற தமிழகத்தின் மூலையிலுள்ள ஒரு அரசுப்பள்ளியில் அனைத்துப்  பிரச்சினைகளையும் சந்தித்துக்கொண்டு அனைத்து கவலைகளையும், பயங்களையும் பட்டுக்கொண்டு ஆனால் அதே சமயத்தில் நம்பிக்கை இழக்காமல் பணி செய்துக்கொண்டிருக்கிறார். தன் வகுப்பில் அனைத்து மாணவர்களின் பெயர், முகவரி, வீட்டிலுள்ளவர்களின் தொலைபேசி எண் என்று தனியே நோட்டு போட்டு எழுதி வைக்கிறார். வகுப்பில் மாணவர்களிடையே தயங்காமல் காதல் போன்ற அவர்களின் கேள்விகளை பற்றி அவர்களின் மொழியில் பேசுகிறார். இரவு 9 மணிக்கு வீட்டை விட்டு ஓடிப்போகலாமா என்ற குழப்பத்தில் போனில் பேசும் மாணவனிடம் நடுரோட்டில் நின்று தன் கை காசை செலவழித்து பேசி மனதை மாற்றுகிறார். படிக்க வராமல் லாரியில் போய் காசு பார்க்கலாம் என்று நினைக்கும் மாணவனிடம் தன் வாழ்கையை சொல்லி மனமாற்றுகிறார். இதற்கெல்லாம் அவருக்கு எதுவும் தனி பலன் இருப்பதாக தெரியவில்லை - வகுப்பில் நூறு சதவிகிதம் வராவிட்டால் மாவட்டத்தை விட்டு மாற்ற போவதாகதான் எச்சரித்திருக்கிறார்கள். இவர் ஒருவரை போல் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் கடமையுணர்ச்சியை நீங்கள் பாராட்டுவதாய் இருந்தால் அடுத்த முறை மாணவர் தற்கொலை போன்ற செய்திகள் வரும்போது இந்த ஆசிரியர்களே மோசம் என்பது போன்ற விமர்சனங்களை தவிருங்கள். அதுவே அவர்களுக்கு நாம் செய்ய கூடிய மிகப்பெரிய உதவி.

Thursday, December 27, 2012

மாணவர் தற்கொலை தடுப்பு முகாம்

எங்கடா ஆளைக் காணோம் என்று தேடிய, தேடாத நண்பர்களுக்கு.... கடந்த சில நாட்களாக எதுவும் எழுத தோன்றாமல் சிந்தனைகளும் நாட்களும் ஓடிக்கொண்டிருந்தன... அந்த தேங்கிய நிலையை உடைக்க என்ன செய்வதென்று யோசித்த போது ஏன் நாம் செய்வதையே பகிர்ந்திட கூடாதென்று தோன்றியதின் விளைவே இந்த பதிவு...
தற்சமயம் நான் வேலை செய்வது விழுப்புரம் மாவட்டத்தில். தமிழகத்தின் மிக பெரிய மாவட்டம். மாணவர்கள் தற்கொலைகள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்று. அதனை தடுக்க நாங்கள் மேற்கொள்ளும் ஒரு முயற்சியே ஆசிரியருக்கான விழிப்புணர்வு முகாம். ஒரு வார காலத்தில் மாவட்டத்தின் மூலை முடுக்கெங்கும் சென்று ஆசிரியர்களுக்காக இதை நடத்துகிறோம். அதற்காக ஒரு கையேட்டை தயாரித்தோம். அதுவே இந்த பதிவு.

மாணவர் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் - கையேடு:
இன்றைய சமுதாயத்தில் மாணவர்களிடையே தற்கொலை என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. நம் விழுப்புரம் மாவட்டத்திலேயே ஒரு சிறுமி பள்ளியிலேயே தற்கொலை செய்து கொண்டது நம்மில் பலருக்கு மறந்திருக்காது. அதே போல் கடந்த ஜூன் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த சமயம் இதே போன்றதொரு முகாம் நம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. அந்த அன்று கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்து சேர்க்கப்பட்டிருந்தனர். அதன் பின் ஆட்சியர் அவர்களின் முயற்சியால் மாணவர்களிடையே தற்கொலை தடுப்பு மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு திறன் வளர்க்க ஒரு செயல்த்திட்டம் உருவாக்கினோம். அதன் முதல் படியாக மாணவர்களுடன் நேரடி தொடர்பிலுள்ள அவர்களின் மதிப்பை பெற்ற தலைமையாசிரியர்களாகிய உங்களுக்கு தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஊட்டவே இந்த முகாம்.
கலெக்டர் சம்பத் இந்த கையேட்டை வெளியிட்ட போது ...
உடன் எங்கள் இணை இயக்குநர் உதயகுமார், CEO திரு.முனுசாமி மற்றும்  ஆசிரியர்கள்

மாணவர் தற்கொலை – உண்மையான பிரச்சினையா?
National Crime records bureau அமைப்பின் கூற்றுப்படி நாளொன்றுக்கு நாடெங்கிலும் 7 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் இறக்கின்றார்கள். 2011 வருடம் மட்டும் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் 2381 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். (2009ல் 2000 பேர்). இது மொத்தத்தில் தற்கொலை செய்துக்கொண்டவர்களில் 1.8% ஆகும். 14 வயதுக்குட்பட்டவர்களில் மட்டும் 3035 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இந்த எண்களில் இருந்து மாணவரிடையே தற்கொலை என்பது மிகவும் முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்பது விளங்கும்.
மாணவர்கள் ஏன் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்?
இதற்கு ஒரு காரணமென்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தற்கொலையும் ஒரு உயிரின் முடிவு. அதற்காக அவர்கள் தேடும் காரணங்களும் மாறுபடுகின்றன. ஆனால் மேலான காரணங்களை களைந்து விட்டு பார்த்தால் அடிப்படையில் சில பொதுவான காரணங்கள் உள்ளன.
மாணவர் உலகம் மூன்று தளங்களில் இயங்குகிறது. 
  • வீடு
  • பள்ளி
  • நண்பர்கள் மற்றும் விளையாட்டு

இவை ஒவ்வொன்றிலும் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் மாணவர்களின் மனநலனை பாதிக்கின்றது.
அமைதியான குடும்பச்சூழல் குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது. பெற்றோரிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள், அவர்களின் குடி முதலிய பழக்கங்கள் மாணவர்களை அவர்களின் குடும்பத்திலிருந்து அன்னியப்படுத்துகின்றன. அதன் விளைவாக அன்பும், தன்னம்பிக்கையும் அவற்றை ஊட்ட வேண்டிய தாய், தந்தையரிடமிருந்து அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. “நான் வேண்டாதவன்” என்ற எண்ணம் அழுத்தமாக அவன் மனதில் பதிகின்றது.
ஒரு மாணவனின் வாழ்க்கையில் பெரும்பங்கு கழிவது பள்ளிகளில்தான். அதே போல் பெற்றோரை போல் பல சமயங்களில் அவர்களிலும் மேலாக அவன் எதிர்ப்பார்ப்பது ஆசிரியர்களின் அபிப்பிராயத்தைதான். பள்ளிகளில் மாணவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சினை தேர்வுகள். தோல்வியை காட்டிலும் அவர்களுக்கு மிக பெரிய பிரச்சினையாக இருப்பது குறைந்த மதிப்பெண்கள். காரணம் குறைந்த மதிப்பெண் பெறும் போது அவர்கள் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களோடு ஒப்பிடப்படுகிறார்கள். அந்த ஒப்பீட்டின் விளைவாக அவனுள்ளே “நீ எதற்கும் உதவாதவன்” என்ற எண்ணம் அவனுக்குள் உருவாகிறது. அதே போல் தேர்வில் தோல்வி என்பதும் மிக பெரிய பூதமாக அவனிடம் காட்டப்படுகிறது. “ஜெயித்தால்தான் உண்டு. தோற்றால் வாழ்க்கையே போய்விடும்” என்று திரும்ப திரும்ப சொல்லப்படும்போது தோல்வியடைந்தால் வாழ்க்கையேயில்லை என்று அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கிறது.
அதேபோல் மாணவப்பருவத்தில் நண்பர்கள், நட்பு என்பது மிக முக்கியமாக தோன்றுகிறது. நண்பர்கள் தன் மேல் வைக்கும் மதிப்பு அவனின் மனவளர்ச்சிக்கு மிக முக்கியம். ஏதேனும் ஒரு காரணத்தால் (உ.ம். உருவக்குறைப்பாடுகளோ, கூச்ச சுபாவம்) அவன் நிராகரிக்கப்பட்டால் அவன் தனித்து விடப்படுகிறான். அதன் மூலம் “நான் தேவையற்றவன்” என்ற எண்ணம் அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கின்றது.
இவையாவும் மாணவர்களிடையே மனசோர்வையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனின் அச்சாணியை முறிக்கும் கடைசி சம்பவமாய் ஏதேனும் ஒரு விஷயம் நிகழ்கிறது. அது தேர்வில் தோல்வியோ, ஆசிரியரின் கண்டிப்பாகவோ அல்லது குடும்பத்தாரின் கண்டிப்பாகவோ இருக்கலாம். அதன் பின் இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று சாவை தேடுகிறார்கள்.
தற்கொலை தடுப்பு – ஆசிரியர்கள் பங்கு – சில பரிந்துரைகள்:
தற்கொலை என்பது தீடீர் முடிவல்ல. சிறிது சிறிதாக ஒரு மனிதன் அதை நோக்கி தள்ளப்படுகிறான். முன்பே குறிப்பிட்டிருந்ததை போல் மாணவர்கள் தங்கள் வாழ்வில் பெரும் பகுதியை கழிப்பது பள்ளியில்தான். ஆகவே ஆசிரியர்களே தற்கொலை தடுப்பு முயற்சிகளுக்கு மிக பெரிய உதவியாயிருக்க முடியும்.
1. தற்கொலையின் மிக முக்கிய காரணம் மனசோர்வு. அதை முதலிலேயே கண்டுப்பிடித்து விட்டாலே பாதிக்கும் மேல் தற்கொலைகளை தடுக்கலாம். மாணவர்களிடையே காணப்படும் மனசோர்வின் சில அறிகுறிகளை கண்டறிவது அவசியம்.
1.       தீடீரென்று மதிப்பெண் குறைவது.
2.       படிப்பு, விளையாட்டு என்று எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பது.
3.       தனிமையை விரும்புவது.
4.       வகுப்பில் தீடீரென்று பிரச்சினை செய்வது.
5.       பசி, தூக்கம் குறைந்ததென்று கூறுதல்.
6.       நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துதல்.
7.       காரணமில்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்தல்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அந்த மாணவனை அழைத்து பேசுங்கள். பல சமயங்களில் தற்கொலை முயற்சி செய்பவர்கள் தேடுவது தங்களின் பிரச்சினையை காது கொடுத்து கேட்கும் ஒரு நபரைதான்.
2. மாணவர்களிடம் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அவர்களின் தோல்விகளை பெரிதுபடுத்திக்காட்டாமல் அவர்களை அதன் காரணங்களை ஆராய செய்யுங்கள். அவர்களின் தன்னம்பிக்கையை வளருங்கள்.
3. வகுப்புகளில் நீங்கள் வாழ்வில் சந்தித்த வெற்றிகளையும், தோல்விகளையும் பகிருங்கள். பிரச்சினைகளை சமாளித்த விதத்தை பற்றி நீங்கள் குறிப்பிடுவது அவர்களுக்கு மிக பெரிய ஊக்கமாக அமையும்.
4. மாணவர்களிடையே அதீத கேலி, கிண்டல் செய்பவர்களை கண்டியுங்கள். ஊனம் என்பது அருவறுப்பானதல்ல என்று விளக்குங்கள்.
5. ஒரு மாணவன் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தினால் அவர்களை கண்டிக்காமல் அவர்களின் காரணத்தை கேளுங்கள். அதற்கு தற்கொலை தவிர வேறு வழிகள் என்னவெல்லாம் உண்டென்று விளக்குங்கள். அவர்களை திட்டுவதோ, அடிப்பதோ, தனிப்பட்ட கவனம் செலுத்துவதோ வேண்டாம்.
6. அவர்களின் பிரச்சினைக்கு காரணம் பெற்றோர் என்றால் அவர்களை சந்தியுங்கள். அவர்களிடம் மாணவர்களின் மன நிலை எந்தளவுக்கு பாதித்துள்ளதென்று விளக்குங்கள்.
7. தற்கொலை பற்றி நேரடியாக வகுப்பில் பேசாதீர்கள். அதை விட பிரச்சினைகளை சமாளிக்கும் மற்ற வழிமுறைகளை பற்றி பேசுங்கள்.

மாணவர்களுக்கு அவர்களின் பிரச்சினையை சொல்ல சரியான நபரில்லாததுதான் பல தற்கொலைகளுக்கு காரணம். அவர்களின் குரலை கேட்க உங்களின் நேரத்தை ஒதுக்கி பொறுமையுடன் இருக்க முடியுமென்றால் பலர் வாழ்கை மாற நீங்கள் காரணமாயிருக்கலாம்.
******************************************************************************************************************************************************************************************************************************************
முகாம் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. ஒரு வார முகாமின் சுவாரசியங்களை அடுத்த பதிவில் பகிர்கின்றேன்.

Thursday, December 6, 2012

விந்தை மனிதர்கள், வித்தியாசமான வியாதிகள்...

என் அறிமுகப்பதிவிலேயே மனநோய்கள் சில சமயம் சுவாரசியமானவை என்று குறிப்பிட்டிருந்தேன். பொதுவாய் வெகு விரைவில் மறக்கப்படும் மனநோயாளிகளில் சிலர் மட்டுமே அவர்களின் வியாதியின் அறிகுறிகளால் நினைவில் கொள்ளப்படுகின்றனர். இந்தப்பதிவுத்தொடரில் அது போன்ற சில வினோத அரிய வியாதிகளையும் அவை பாதித்த மனிதர்களையும் பார்ப்போம். 

எங்கள் சிறு வயதில் ஒரு விளையாட்டு உண்டு. தீப்பெட்டிகளின் அட்டைகளை ஒரு வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு அவற்றை ஒரு கல் கொண்டு கொத்தி வெளியே எடுக்க வேண்டும். அந்த தீப்பெட்டி அட்டைகளில் ஒரு தகுதி வரிசை உண்டு. சிலவற்றுக்கு மதிப்பு அதிகம். முக்கியமாக ஒரு சில சமயங்களில் பின்னால் தவறுதலாக அட்டைப்படத்தை மீண்டும் அச்சிட்டிருப்பார்கள். அவற்றுக்கு இரட்டை மதிப்பு. அந்த காலத்தில் எங்கள் எல்லோருக்குமே அந்த அழுக்கு அட்டைகளை சேகரிப்பதில் ஒரு ஆர்வம்... வெறி... ஒரு நாள் நான் சேர்த்து வைத்திருந்த அழுக்கு அட்டைகளின் நாற்றம் தாங்காமல் அதை தலை முழுகி விட்டுத்தான் வீட்டுக்குள் வர வேண்டுமென்று காதைத்திருகி "அன்பு"க்கட்டளை இடப்பட்டபின் என் நண்பனிடம் அவற்றை அள்ளிக்கொடுத்தேன். அதன் பின் எப்போது அவன் அதைக் கொண்டு விளையாடினாலும் ஏக்கத்துடன் அங்கே சென்று நின்றுக்கொண்டிருப்பேன். அதன் பின் மற்ற விளையாட்டுகள் வந்தன. அந்த அழுக்கு அட்டைகளையும் அவை தந்த வருத்ததையும் நினைவுகளின் கல்லறையில் புதைத்து விட்டு வாழ்க்கையில் நகர்ந்து விட்டேன்.

நாம் எல்லோருமே ஏதோ ஒன்றை மிக ஆசையுடன் சேகரித்துக்கொண்டிருப்போம். பணம், புத்தகம், பாடல், தபால்தலை என்று நமக்கு முக்கியமாக தெரியும் அவைகள் மற்றவருக்கு குப்பையாக தெரியும். ஆனால் எல்லா சேகரிப்புகளும் ஒரு இறுதி தினமிடப்பட்டே வருகின்றன. என்றோ ஒரு நாள் சேர்த்து வைத்த அந்த பொருட்கள் அத்தனையையும் ஏதோ ஒரு காரணத்தால் இழக்கிறோம். அப்படி இழக்க விரும்பாமல் சேகரிக்கும் மனிதன் எவ்வளவுதான் சேர்ப்பான்?...

கோலியர் சகோதரர்களைச் சந்தியுங்கள்....

ஹோமர் மற்றும் லாங்க்லி
1947 ஆம் ஆண்டு நியுயார்க் நகரத்தில் ஹார்லம் பகுதியிலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. யாரென்று சொல்லாமல்,ஒரு முகவரியைக் குறிப்பிட்டு அங்கே ஒரு பிணம் கிடப்பதாக மட்டும் சொல்லிவிட்டு வைத்து விட்டான். அந்த முகவரியின் சொந்தக்காரர்கள் கோலியர் சகோதரர்கள்.

ஹோமர் மற்றும் லாங்க்லி கோலியர்.அண்ணன் தம்பி.பிறவிப் பணக்காரர்கள்.அவர்கள் பரம்பரை சொத்துதான் அந்த வீடு. திருமணமாகாமல் தன்னந்தனியே வசித்து வந்த அவர்களுக்கு இயல்பாகவே மனிதர்களுடன் பழகுவது பிடிக்காத சங்கதியாயிருந்தது. கூடவே அந்தக் காலகட்டத்தில் ஹார்லம் பகுதி கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. திருட்டு பயமும் ஜாஸ்தி. அவர்கள் மத்தியில் யாரிடமும் பழகாத இவர்களின் குணம் ஒரு புதிராக எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. அவர்களிடம் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள் இருப்பதாக புரளி கிளம்ப அவர்களின் வீட்டை உடைத்து உள்ளே நுழைவதும் திடீர்திடீரென்று அழைப்பு மணியை அடிப்பது, ஜன்னல் மேல் கல் எறிவது என்று அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. மூத்தவர் ஹோமர் இதற்குள் சக்கர நாற்காலியில் மூட்டுப் பிரச்சினையால் முடங்க, இளையவர் லாங்க்லி மிகவும் பயந்து போனார். அதன் விளைவாக, அவர் மேலும் மேலும் மனிதர்களைத் தவிர்க்கத் தொடங்கினார். ஜன்னல், கதவு என்று எல்லா இடத்தையும் பெரிய பெரிய பெட்டிகள் கொண்டு அடைக்க ஆரம்பித்தார். யாரும் பார்க்காத இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வருவது, சின்னத் தேவைகளுக்குக் கூட மிகத் தொலைவில் உள்ள இடங்களுக்கு செல்வதென்று மேலும் மேலும் வெளியுலகத் தொடர்புகளை அறுத்தார்.

ஒவ்வொன்றாக நாகரீகம் அந்த வீட்டிலிருந்து செல்ல ஆரம்பித்தது. நாங்கள் உபயோகிக்காமல் பில் வந்துள்ளதென்று தொலைப்பேசிக் கட்டணத்தைக் கட்ட மறுக்க, தொலைப்பேசி தொலைந்தது. வருமானம் இல்லையென்று வரி கட்ட மறுக்க, மின்சாரம் மறைந்தது. தண்ணீர் இணைப்பும் அஃதே. ஆனால் எதற்கும் அசராமல் கெரசின் அடுப்பும், பதப்படுத்திய உணவுகளும் கொண்டு சமாளித்தார்.

இதற்கிடையே ஹோமருக்கு மெல்ல மெல்ல கண் பார்வை மறையத் தொடங்கியது. அதற்கும் வெளியே வராமல், தாங்களே வைத்தியம் பார்த்துக்கொள்ள கண் பார்வை போனது. இந்த சமயத்தில் ஒரு முறை ஜப்தி செய்ய வந்த போலீஸ்காரர்களையும், பேங்க் அதிகாரிகளையும் விரட்டியடித்தார்.அப்போது அங்கே இருந்த பேப்பர் மூட்டைகளைப்  பார்த்து,"இது என்ன?" என்று போலீஸ் அதிகாரி கேட்க, அண்ணனுக்கு கண் பார்வை திரும்பும்போது படிக்க என்று பதிலளித்தார் லாங்க்லி. அந்த முறை அவரின் கடன்களை ஒரே காசோலையில் தீர்க்க, அதன்பின் யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. மெல்ல சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் சீண்டலிலிருந்தும் அந்த சகோதரர்கள் மறைந்தனர்- அந்த தொலைப்பேசி அழைப்பு வரும் வரை...

அந்த வீடு
அழைப்பு மணிக்கு பதிலில்லாமல் போக, கதவை உடைத்து திறந்த போலீஸ்காரர்களுக்கு அதிர்ச்சி. வாசலை அடைத்து பெட்டிகள். எந்தக் கதவை, ஜன்னலை உடைத்தாலும் பெட்டிகள், தடுப்புகள். அது பத்தாதென்று தாங்க முடியாத நாற்றம் வேறு. வேறு வழியில்லாமல் ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் எடுத்து வெளியே போட ஆரம்பித்தார்கள். முதல் தளத்தில் ஒரு வழியாக உள்ளே நுழைய இடம் கிடைத்து நுழைந்தவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி. வீடு முழுக்க மேற்க்கூரையைத் தொடும் குப்பைகள்,  தினசரிகள், புத்தகங்கள், டப்பாக்கள்,குப்பையில் கிடந்த சாமான்கள், எட்டு உயிருள்ள பூனைகள் என்று பலவற்றைக் கொண்டு வீட்டை ஒரு புதிர் கிடங்காக மாற்றியிருந்தார்கள். இதில் ஆங்காங்கே குப்பைகளுக்கு நடுவே சுரங்கப்பாதைகள். அவற்றில் யாரும் நுழைவதைத் தடுக்க, கண்ணிகள். அவைகளைத் தட்டினால் அருகே இருக்கும்  குப்பை சரிந்து அமுக்கி விடும். என்னடா இதுவென்று நொந்து போன போலீஸ், அந்த குப்பைகளை கவனமாக அள்ளிக்கொட்ட துவங்கியது.
கூரையைத் தொடும் குப்பை
குப்பையின் நடுவே சுரங்கப்பாதை





இரண்டு நாட்களுக்குப் பின் ஹோமரை கண்டெடுத்தார்கள்.தன் சக்கர நாற்காலியிலேயே உணவில்லாமல் இறந்து கிடந்தார். ஆனால் லாங்க்லியைக் காணோம். தொடர்ந்து குப்பையை அள்ள, ஹோமருக்கு சற்று தொலைவிலேயே அவர் சடலமும் கிடந்தது. அண்ணனுக்கு உணவு கொண்டு வரும்போது, தவறுதலாக அவர் வடிவமைத்த கண்ணியில் அவரே சிக்கிக் கொள்ள, அவர் சேகரித்த குப்பைகளே அவரை நசுக்கிக் கொன்று விட்டது. அதன்பின் அண்ணன் பசி, தாகத்தில் இறந்திருக்கலாம் என்று போலீஸ் முடிவுக்கு வந்தது.

அந்த வீட்டை முழுவதுமாக காலி செய்ய ஒரு வாரம் பிடித்தது. அங்கிருந்து எடுத்த குப்பையின் அளவு- அதிகமில்லை ஜென்டில்மேன்.....

 140 டன்தான்!!!...

வெளிநாடுகளில் இது போல விசித்திர மனிதர்கள் அவ்வபோது செய்திகளில் தோன்றுவார்கள். அவர்கள் சேர்த்து வைக்கும் குப்பையின் அளவே அவர்களின் பிரபலத்திற்குக் காரணமாயிருக்கும். இது போன்று சேகரிப்பவர்களுக்கு என்ன பிரச்சினை?

Syllogomania or Compulsive Hoarding என்று பேன்சி பெயர்களில் இதை அழைக்கிறார்கள். பொதுவாக இது போன்று சேகரிப்பவர்களுக்கென்று சில பொதுவான குணங்கள் கண்டறிந்துள்ளனர்.இவர்கள் வயதானவர்களாகவோ, மன நலம் குன்றியவர்களாகவோ இருக்கின்றனர். யாருடனும் பழகாமல் தனியாக வசிக்கின்றனர். வேறு ஏதோ மனப்பிரச்சினையின் வெளிப்பாடாகவே இது போன்று சேகரிக்கும் பழக்கம் பல சமயங்களில் உள்ளது.

இது போன்று நம் நாட்டிலும் உள்ளனரா? அதிகம் வெளியே தெரிவதில்லை. வெளிநாடுகளில் இருப்பது போன்று இல்லாமல், நம் நாட்டில் குடும்பமாய் வசிப்பதினாலும், தனி மனித சுதந்திரத்தை அவர்கள் அளவுக்கு போற்றாமல் இருப்பதாலும்,  இந்த சகோதரர்களைப் போல் இல்லாமல் சீக்கிரமே கண்டறியப்படுவது காரணமாய் இருக்கலாம். ஆனாலும் அவ்வப்போது "தேவையில்லாமல் குப்பையைச் சேர்க்கிறார்" என்பது போன்ற குற்றச்சாட்டை கேட்பதுண்டு. அவற்றின் அடிப்படையான மனோவியாதிக்கு வைத்தியமளித்தால் இந்த பழக்கம் குறைகின்றது அல்லது சில சமயம் மறைகின்றது.

உயிருள்ளவரை ரகசியமாக மறைக்கப்பட்ட வாழ்க்கையை மரணம் வெட்டவெளிச்சத்தில் உரித்துக் காட்டியதை காலத்தின் கோலம் என்பதைத்தவிர என்ன சொல்ல?...